

கொழும்பு,
அன்னியச் செலாவணி பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடியால் தவித்துவரும் இலங்கை, இந்தியாவைத்தான் மலைபோல் நம்பியிருக்கிறது.
அந்நாட்டுக்கு கடந்த ஜனவரி மிகவும் அத்தியாவசியமான பொருளாதார உதவியை இந்தியா வழங்கியது. மேலும் இந்தியாவின் கையை எதிர்பார்க்கும் இலங்கை, அதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயன்று வருகிறது.
இதுகுறித்து இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்து ரூ.7 ஆயிரம் கோடி கடனுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக இருந்தது. அதற்கு இந்தியா கடும் நிபந்தனைகள் விதித்திருப்பதாகவும் கூறப்பட்டது. அதனால் பசில் ராஜபக்சேயின் வருகை தள்ளிப்போனது.
இந்நிலையில் பசில் ராஜபக்சே நேற்று தொலைபேசி மூலம் மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கரை தொடர்புகொண்டு பேசினார்.
அதையடுத்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், பசில் ராஜபக்சே இம்மாதம் இந்தியா வருகிறார். அவரிடம், இலங்கைக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று இந்தியா சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.