இலங்கை நிதி மந்திரி விரைவில் இந்தியா வருகிறார்; ரூ.7,500 கோடி கடன் பெற திட்டம்

இலங்கை நிதி மந்திரி விரைவில் இந்தியா வருகிறார். ரூ.7 ஆயிரத்து 500 கோடி கடன் பெற திட்டமிட்டுள்ளார்.
இலங்கை நிதி மந்திரி விரைவில் இந்தியா வருகிறார்; ரூ.7,500 கோடி கடன் பெற திட்டம்
Published on

நிதி நெருக்கடி

இலங்கையில் அன்னிய செலாவணி கையிருப்பு கணிசமாக குறைந்து விட்டது. இதனால் அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

உணவு பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. மருந்துகள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியை தீர்க்க இந்தியா உதவி வருகிறது. கடந்த மாதம், இந்தியா 90 கோடி டாலர் (ரூ.6 ஆயிரத்து 750 கோடி) கடன் அறிவித்தது. அன்னிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும், உணவு பொருட்கள் இறக்குமதிக்காகவும் இந்த கடன் அறிவிக்கப்பட்டது.

பசில் ராஜபக்சே

இந்தநிலையில், இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே விரைவில் இந்தியாவுக்கு வருகிறார். கடந்த 2 மாதங்களில் அவர் 2-வது முறையாக வருகிறார்.

இதுகுறித்து இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே, கடந்த டிசம்பர் மாதம் மேற்கொண்ட இந்திய பயணம் பயனுள்ளதாக இருந்தது. இந்தியாவிடம் இருந்து 240 கோடி டாலர் நிதியுதவி கிடைத்தது.

இதையடுத்து, இன்னும் 2 வாரங்களில் அவர் மீண்டும் இந்தியாவுக்கு செல்கிறார். அப்போது, இலங்கைக்கான இந்தியாவின் பொருளாதார நிவாரண தொகுப்பு திட்டம் இறுதி செய்யப்படுகிறது.

கடன்

உணவு மற்றும் மருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதற்காக ரூ.7 ஆயிரத்து 500 கோடி கடன் பெறப்படும். அதனால், பசில் ராஜபக்சேவின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

இலங்கையின் பொருளாதார சிக்கலில் இந்தியாவின் தலையீடு நேர்மறையாக அமைந்துள்ளது. இலங்கைக்கு மூன்றில் ஒரு பங்கு சுற்றுலா பயணிகள், இந்தியாவில் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com