

கொழும்பு,
இலங்கையின் பிரதமராக 6-வது முறையாக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளார்.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் தொடர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வரும் அவர், இதற்காக உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்காக மந்திரி சபையை விரிவுபடுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் 4 மந்திரிகளை நேற்று அவர் புதிதாக நியமித்து உள்ளார். இவர்கள் அனைவரும் நேற்று மாலையில் பதவியேற்றுக்கொண்டனர்.ரணில் விக்ரமசிங்கே மந்திரி சபையில் 20 பேர் வரை பதவியேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மீதமுள்ளவர்கள் வருகிற நாட்களில் நியமிக்கப்படுவார்கள் என தெரிகிறது.
இதற்கான பணிகளை ரணில் விக்ரமசிங்கே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இதற்காக எதிர்க்கட்சிகளுக்கு அவர் பகிரங்க அழைப்பு விடுத்தார். அந்த வகையில் பிரதான எதிர்க்கட்சி தலைவரும், சமாகி ஜன பலவேகயா (எஸ்.ஜே.பி.) கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாசாவுக்கு நேற்று அவர் கடிதம் எழுதியுள்ளார்.
கட்சி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, பாரம்பரிய அரசியலுக்கு அப்பாற்பட்ட கட்சி சார்பற்ற ஒரு அரசை உருவாக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ள ரணில் விக்ரமசிங்கே, நாளுக்கு நாள் மோசமாகி வரும் நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்த நேர்மறையான பதிலை தருமாறும் வலியுறுத்தி இருந்தார்.
ரணில் விக்ரமசிங்கேவின் அழைப்பை சஜித் பிரேமதாசா நிராகரித்து விட்டார். எஸ்.ஜே.பி. கட்சியைப்போல மேலும் சில எதிர்க்கட்சிகளும் ரணில் விக்ரமசிங்கே அரசில் இணையமாட்டோம் என அறிவித்தன. நாடாளுமன்றத்தில் ஓரிடத்தை மட்டுமே கொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆளும் இலங்கை மக்கள் கட்சி ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது.
இதனிடையே, ரணில் விக்ரமசிங்கேவிற்கு முன்னாள் அதிபர் சிறிசேனாவின் கட்சி ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. இது தொடர்பாக ரணில் விக்ரமசிங்கேவுக்கு சிறிசேனா எழுதிய கடிதத்தில், அரசாங்கத்தை அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும்என்று தெரிவித்துள்ளார்.