இலங்கை எம்.பி. ஜீவன் தொண்டமான் பொங்கல் வாழ்த்து

அனைத்து மக்களுக்கும் சவுபாக்கியம் நிறைந்த இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.
கொழும்பு,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் எம்.பி. வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்த்து செய்தியில், தைப்பொங்கல் என்பது தமிழர்களால் உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் உன்னதமான அறுவடை திருவிழாவாகும். இது “உழவர் திருநாள்” என்றும் அழைக்கப்படுகிறது.
தைப்பொங்கல் என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல; அது நமது கலாசாரம், பாரம்பரியம் மற்றும் இயற்கையை போற்றும் மனப்பான்மையின் அடையாளமாக விளங்குகிறது. உழவர்களை கவுரவித்து, இயற்கையை வணங்கும் இந்த நன்னாளில் நாம் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும் உதயமாகும் தைப்பொங்கல் பண்டிகை, மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது. மலையக பெருந்தோட்ட சமூகத்தின் உயர்வுக்காகவும், உரிமைக்காகவும் என்றும் குரல் கொடுத்து வரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இடைவிடாது தமது பணியை தொடரும் என்பதை இந்த தைப்பொங்கல் நன்நாளில் தெரிவித்து கொள்கின்றேன்.
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பதற்கமைவாக, தைப்பொங்கல் பண்டிகை தமிழர்கள் பரந்து வாழும் இடங்கள் தோறும் கொண்டாடப்படுகிறது. அத்தோடு மலையகமெங்கும் இத்தைப்பொங்கல் மங்களகரமாக திகழ வேண்டும். மலையகத்திலும் இந்த நாட்டின் தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் தென்னக பண்பாடு, கலாசார விழுமியங்களுக்கு அமைவாக இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.
தோட்ட தொழிலாளர்களின் உரிமைக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது கட்டுக்கோப்பை மேலும் பலப்படுத்தி, எமக்குரிய உரிமைகள் மற்றும் இதர வரப்பிரசாதங்களை பெற்று கொள்வதற்காக இந்த நன்னாளில் நாம் திடசங்கற்பம் எடுத்துக்கொள்வோம்.
மேலும், இத்தருணத்தில் அனைத்து மக்களுக்கும் சவுபாக்கியம் நிறைந்த இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன் என தெரிவித்துள்ளார்.






