இலங்கை வீரர்கள் ஐ.பி.எல்.லில் இருந்து விலகி நாட்டுக்கு ஆதரவு தரவேண்டும்; அர்ஜுன ரணதுங்கா பேட்டி

ஐ.பி.எல்.லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் அதில் இருந்து விலகி நாட்டுக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்கா இன்று கூறியுள்ளார்.
இலங்கை வீரர்கள் ஐ.பி.எல்.லில் இருந்து விலகி நாட்டுக்கு ஆதரவு தரவேண்டும்; அர்ஜுன ரணதுங்கா பேட்டி
Published on

கொழும்பு,

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும், தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக புரட்டிப்போட்டு உள்ளது. எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என இலங்கை முழுவதும் இயல்புநிலை முடங்கி இருக்கிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சா மற்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சா ஆகிய இருவரும் பதவி விலக கோரி பெருமளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து, நெருக்கடி சூழ்நிலைக்கு தீர்வு காண பொதுமக்கள் அமைதி காக்கும்படியும், தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்சா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்கா மற்றும் பானுகா ராஜபக்சா உள்ளிட்டோர் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் மந்திரியாக பதவி வகிக்கும் அர்ஜுன ரணதுங்கா செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, சில கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல்.லில் விளையாடி வருகின்றனர். நம்முடைய நாட்டை பற்றி அவர்கள் எதுவும் பேசவில்லை. அரசுக்கு எதிராக பேச மக்கள் அச்சப்படுகின்றனர்.

அமைச்சகத்தின் கீழுள்ள கிரிக்கெட் வாரியத்தில் இந்த கிரிக்கெட் வீரர்கள் பணியாற்றி கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய வேலையை காப்பாற்றி கொள்ள முயற்சிக்கின்றனர்.

சில இளம் கிரிக்கெட் வீரர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கைகளை விட்டு வருகின்றனர். அதுபோல் அவர்களும் முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.

ஏதேனும் தவறான ஒன்று நடக்கும்போது, உங்களது தொழிலை பற்றி எண்ணாமல், வெளியே வந்து அதனை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு தைரியம் இருக்க வேண்டும். நீங்கள் ஏன் போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை? என மக்கள் என்னை கேட்கிறார்கள்.

நான் கடந்த 19 ஆண்டுகளாக மட்டுமே அரசியலில் உள்ளேன். இது அரசியல் விவகாரமும் அல்ல. இதுவரை, அரசியல் கட்சிகளோ மற்றும் அரசியல்வாதிகளோ போராட்டங்களில் ஈடுபடுவில்லை. அதுவே இந்நாட்டு மக்களின் மிக பெரிய பலம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com