கச்சத்தீவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம் ; இலங்கை அதிபர் திட்டவட்டம்


கச்சத்தீவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம் ;  இலங்கை அதிபர் திட்டவட்டம்
x

இலங்கை அதிபர் ஒருவர், கச்சத்தீவுக்கு பயணம் சென்றது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

கொழும்பு,

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. தமிழக மீனவர்களின் நலன் கருதி கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய்யும் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருந்தார். இந்த நிலையில், இலங்கை அதிபர் அனுர குமார, இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு சென்றார். மயிலிட்டி துறைமுகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த அவர், யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் திடீரென நான்கு ரோந்துப் படகுகளுடன் கச்சத்தீவுக்கு சென்ற அவர், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கச்சத்தீவை சுற்றிப் பார்த்தார். அப்போது இலங்கை அதிபர் பேசியதாவது: “கச்சத்தீவு எங்களுடைய பூமி. இந்த தீவு எமது மக்களுக்கு சொந்தமானது. எந்த ஒரு செல்வாக்கிற்கும், அதிகாரத்திற்கும் அடிபணிய மாட்டேன். மக்களுடைய உரிமைகளை பாதுகாக்க வேண்டியது எனது பொறுப்பு. அதை நான் நிறைவேற்றுவேன். எக்காரணம் கொண்டும் கச்சத்தீவை விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்றார்.

தொடர்ந்து கச்சத்தீவின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு இலங்கை கடற்படையின் ரோந்துப் படகில் யாழ்ப்பாணம் திரும்பினார். இலங்கை அதிபர் ஒருவர் கச்சத்தீவுக்கு பயணம் சென்றது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

1 More update

Next Story