இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே அதிரடி நீக்கம்- ரணில் விக்ரம்சிங்கே நடவடிக்கை

இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக கலைக்கப்பட்டதை எதிர்த்து வாரியத்தின் தலைவராக இருந்த ஷம்மி சில்வா முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே அதிரடி நீக்கம்- ரணில் விக்ரம்சிங்கே நடவடிக்கை
Published on

கொழும்பு,

அண்மையில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சரியாக விளையாடவில்லை. இதனால், அந்த அணிக்கு எதிராக உள்நாட்டில் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக கடந்த 6-ம் தேதி இலங்கை கிரிக்கெட் வாரியத்தை மொத்தமாகக் கலைத்த விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்நாடு 1996-ல் கோப்பை வென்றபோது அணியின் கேப்டனாக இருந்தவருமான அர்ஜுன ரணதுங்க தலைமையில் தற்காலிகக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். 7 பேர் கொண்ட இந்த தற்காலிக குழுவில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக கலைக்கப்பட்டதை எதிர்த்து வாரியத்தின் தலைவராக இருந்த ஷம்மி சில்வா முறையீட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நவம்பர் 7ம் தேதி வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாரியம் கலைக்கப்பட்ட உத்தரவை 2 வாரங்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைத்தது. இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை களைத்த விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கேவை, அதிபர் ரணில் விக்ரமசிங்கே கண்டித்துள்ளார். மேலும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுவை கலைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். இல்லாவிட்டால், தனது கட்டுப்பாட்டின் கீழ் விளையாட்டுத் துறை வருமாறு புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் அதிபர் கூறி உள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே, ''7 பேர் கொண்ட குழுவை கலைக்குமாறு அதிபர் என்னிடம் கூறினார். இல்லாவிட்டால், தனது தலைமையின் கீழ் விளையாட்டுத் துறை வருமாறு சட்டம் இயற்றப்படும் என்றும் அவர் எச்சரித்தார். நான் அமைச்சராக இருக்கும் வரை குழுவை கலைக்க முடியாது என அதிபரிடம் கூறிவிட்டேன். வேண்டுமென்றால், என்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்கள் என்றும் தெரிவித்துவிட்டேன்'' என்று தெரிவித்தார். இந்நிலையில், விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கேவை பதவி நீக்கம் செய்து அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com