ஈஸ்டர் தின தற்கொலைப்படை தாக்குதல்: மன்னிப்பு கோரினார் இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா

ஈஸ்டர் தின தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா மன்னிப்பு கோரினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொழும்பு,

கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு தாக்குதலில் 270-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களில் 11 இந்தியர்களும் அடங்குவர். அந்த தாக்குதலை தடுக்க தவறிவிட்டதாக அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனா மீதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் கடந்த 12-ந்தேதி இலங்கை சுப்ரீம் கோர்ட்டு, குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக சிறிசேனா இலங்கை மதிப்பில் ரூ.10 கோடி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இல்லாவிட்டால் அவர் சிறை செல்ல நேரிடும் என்றும் எச்சரித்தது. தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துவந்த சிறிசேனா, பாதுகாப்பு துறையின் கவனக்குறைவுதான் குண்டு தாக்குதலுக்கு காரணம் என்று கூறிவந்தார்.

இந்நிலையில் கொழும்பில் நேற்று தனது சுதந்திரா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சிறிசேனா, 'மற்றவர்கள் செய்த ஒன்றுக்காக (குண்டு தாக்குதல்) நான் நாட்டின் கிறிஸ்தவ சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இலங்கை அதிபராக இருந்த மைத்ரிபால சிறிசேனா, அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com