இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் ஓராண்டு நீடிக்கும்- ரணில் விக்ரமசிங்கே

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் ஓராண்டு நீடிக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
Image Courtacy: AFP
Image Courtacy: AFP
Published on

கொழும்பு,

பொருளாதார நெருக்கடி

இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசு நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் தற்போதைய நெருக்கடியில் இருந்து நாடு மீள்வதற்கு ஓராண்டு ஆகும் என ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

கொழும்புவில் நடந்த 2 நாள் கருத்தரங்கு ஒன்றில் பேசிய விக்ரமசிங்கே இது தொடர்பாக கூறியதாவது:-

கடினமான நாட்கள்

அடுத்த 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை இலங்கையின் பொருளாதார நெருக்கடி நீடிக்கும். அடுத்த ஆண்டு ஜூலை வரை இந்த கடினமான நாட்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.

நாட்டின் பொருளாதார மீட்சிக்கு அணுசக்தி மற்றும் தளவாடங்கள் போன்ற புதிய துறைகளை நாம் பார்க்க வேண்டும். இதில் தளவாடங்கள் துறையை நான் அதிகமாக நம்புகிறேன்.

இந்திய, வங்காளதேச, பாகிஸ்தான் பொருளாதாரங்களை பார்க்கும்போது, கொழும்பு, அம்பன்தோட்டா, திரிகோணமலையிலும் தளவாடங்கள் துறை மிகப்பெரிய பங்காற்ற முடியும்.

அணுசக்தி துறை

சொத்துகள் மீது வரி விதித்தாலும், முதலில் பொருளாதார மீட்சிக்காகவும், இரண்டாவது சமூக நிலைத்தன்மைக்காகவும் அந்த நடவடிக்கைகளை நாம் நாட வேண்டும்.

அது மட்டுமின்றி, அணுசக்தி துறையில் நுழைவதை நாடு பரிசீலிக்க வேண்டும். நம்மிடம் அதிக எரிசக்தி இருந்தால் இந்தியாவுக்கு விற்கலாம். அதே நேரத்தில் அதிக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும் கிடைக்கும். இதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

சர்வதேச நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில், கடன் மறுசீரமைப்பு தொடர்பான சட்ட மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்கள் பணியை முன்னெடுத்து செல்கின்றனர்.

வெளிநாட்டு கடன் மற்றும் உள்ளூர் கடன் இரண்டையும் நாம் பார்க்க வேண்டும். இது நிச்சயமாக கடினமான காலமாக இருக்கும். நாம் இதுவரை பார்த்திராத காலகட்டமாக முதல் ஆறு மாதங்கள் இருக்கும்.

ஊட்டச்சத்து குறைபாடு

நாட்டின் 2.10 கோடி மக்கள் தொகையில், 60 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் மேலும் பலர் வேலையை இழந்து வருகின்றனர். அவர்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசியல் நிலைத்தன்மை முக்கியமானது.

எனவே சீர்திருத்தத்தின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார பரிமாணங்கள், நாம் செயல்படுத்தப் போகும் மறுசீரமைப்பு ஆகியவற்றை நாம் பார்க்க வேண்டும்.

இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com