விமானத்துக்குள் கத்திக்குத்து சம்பவம்: பயங்கரவாத தொடர்பு குறித்து ஓமன் துணை விமானியிடம் விசாரணை

இந்திய விமானியை கத்தியால் தாக்கிய ஓமன் துணை விமானி துபாய் கொண்டு வரப்பட்டார்.
விமானத்துக்குள் கத்திக்குத்து சம்பவம்: பயங்கரவாத தொடர்பு குறித்து ஓமன் துணை விமானியிடம் விசாரணை
Published on: 

துபாய் ,

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற பயணிகள் விமானத்தில், இந்தியாவைச் சேர்ந்த தலைமை விமானியை கத்தியால் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி, சவுதி அரேபிய அதிகாரிகளால் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விமானத்திலேயே ஏற்பட்ட மோதல்

துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி 174 பயணிகளுடன் போயிங் விமானம் சென்று கொண்டிருந்தது. சவுதி அரேபிய வான்வெளியில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, தலைமை விமானியான இந்தியாவைச் சேர்ந்த சுமித் மச்சார் மற்றும் ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கத்தியால் தாக்கியதாக குற்றச்சாட்டு

மோதலின்போது துணை விமானி, தலைமை விமானியை கத்தியால் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த தலைமை விமானி ரத்த வெள்ளத்தில் விழுந்த நிலையில், விமானத்தின் கட்டுப்பாட்டு அறைக் கதவைத் திறந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மற்ற விமானப் பணியாளர்களும் பயணிகளும் இணைந்து துணை விமானியை மடக்கிப் பிடித்ததாகவும், இதனால் விமானத்தில் ஏற்பட்ட நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அதிகாரிகள் விசாரணை

விமானம் தரையிறங்கியதும், ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானியை சவுதி அரேபிய அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தினர். சவுதி உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், விமானப் பயணத்தின்போது தலைமை விமானி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைப்பு

இதையடுத்து கைது செய்யப்பட்ட துணை விமானி, ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாத தொடர்பு குறித்து ஆய்வு

தாக்குதலில் காயமடைந்த தலைமை விமானி சிகிச்சை பெற்று வரும் நிலையில், விமானத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத தொடர்பு ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com