

வாஷிங்டன்,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டா கிளாரிட்டா நகரில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வகுப்புகள் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு வகுப்பறையில் இருந்த 16 வயதான மாணவர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, சக மாணவர்களை சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது.
மாணவர்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக அலறி அடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் அந்த மாணவர் 3 மாணவிகள் உள்பட 5 பேரை குருவியை சுடுவது போல் சுட்டு தள்ளினார். அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். பின்னர் அந்த மாணவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். இதில் அவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதற்கிடையே துப்பாக்கிச்சூடு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தாக்குதல் நடத்திய நபர் உள்பட படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி 16 வயதான ஒரு மாணவியும், 16 வயதான ஒரு மாணவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.