3 முதல் 17 வயதுடையவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியின் நோய் எதிர்ப்புத்தன்மை குறித்து ஆய்வு

சினோபார்ம் தடுப்பூசியின் நோய் எதிர்ப்புத்தன்மை 3 முதல் 17 வயதுடையவர்களுக்கு ஆய்வு செய்யப்பட உள்ளது.
3 முதல் 17 வயதுடையவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியின் நோய் எதிர்ப்புத்தன்மை குறித்து ஆய்வு
Published on

இது குறித்து கொரோனா வைரஸ் மருத்துவ மேலாண்மையின் தேசிய கமிட்டி தலைவர் டாக்டர் நவல் அல் காபி கூறியதாவது:-

குழந்தைகள்தான் நாட்டில் வசிக்கும் எதிர்கால சமூகமாகும். தற்போது அமீரகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பாக தடுப்பூசி போடுவதற்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டு வருகிறது. சிறு குழந்தைகளும் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு அமீரகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்க ஆலோசனை நடந்து வருகிறது.

தற்போது சினோபார்ம் தடுப்பூசி 3 வயது முதல் 17 வயதுடையவர்களுக்கு எந்த அளவில் நோய் எதிர்ப்புத்தன்மையை கூட்டுகிறது? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. உலக அளவில் கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக இதுபோன்ற மருத்துவ சோதனைகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளில் அமீரகத்தில் இந்த ஆய்வுகள் நடைபெற உள்ளது முதல் முறையாகும். சர்வதேச மருத்துவ விதிமுறைகளை கடைபிடித்து அபுதாபி சுகாதாரத்துறையின் ஒத்துழைப்பில் 3 வயது முதல் 17 வயதுடைய அமீரகத்தில் வசிக்கும் அனைத்து நாடுகளை சேர்ந்த 900 பேர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது.

தன்னார்வலர்களாக வருபவர்கள் மற்றும் பெற்றோர்களின் பாதுகாப்பில் வரும் குழந்தைகளுக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டு சுகாதார அமைச்சகத்தால் கண்காணிக்கப்படும். இந்த ஆய்வில் வயதின் அடிப்படையில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சினோபார்ம் தடுப்பூசியின் நோய் எதிர்ப்புத்தன்மை அவர்களது உடலில் எவ்வாறு உள்ளது? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

ஒவ்வொருவரின் தனிப்பட்ட நோய் எதிர்ப்புத்தன்மை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். இந்த ஆய்வு வெற்றி பெற்றால் அமீரகத்தில் 3 வயது முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பரிந்துரைக்கப்படும். வருகிற 2021-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கின் கீழ் இந்த ஆய்வானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com