

காரகாஸ்
வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.
வெனிசுலாவில் இன்று காலை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் முதலில் ரிக்டர் அளவுகோலில் 7.1 அளவிலான நிலநடுக்கமும், பின்னர் 7.5 அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டன. முதலில் மொரோன் நகரில் இருந்து மேற்கு பகுதியிலும், காரகாஸ் நகரில் இருந்து 168 கி.மீ. தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
2-வது நிலநடுக்கம் மொரோன் நகரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. இதுபற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், தலைநகர் காரகாஸ் நகரில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதில், பல்வேறு பகுதிகளில் இருந்த கட்டிடங்கள் குலுங்கின. ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தெரிவித்தது.
இதனால் பல இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன. பொதுமக்கள், தங்களுடைய செல்ல பிராணிகளை தூக்கிக்கொண்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர். இதனால் பரபரப்பாக இயங்கி வந்த உணவு விடுதிகள் மற்றும் பிற வர்த்தக கடைகளில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். சாலை முழுவதும் புழுதி பறந்தது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. பலர் காயமடைந்தனர். இதனால், அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.