சூடானில் திடீர் கலவரம்; 47 பேர் படுகொலை

சூடானின் எல்-பாஷெர் பகுதியில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி, பொதுமக்களில் 30 பேர் மற்றும் வீரர்களில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
சூடானில் திடீர் கலவரம்; 47 பேர் படுகொலை
Published on

கார்டூம்,

சூடான் நாட்டில் அதிகாரங்களை கைப்பற்றும் நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மத்தியில் மோதல் வெடித்தது. துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில் துணை ராணுவ தளபதி முகமது ஹம்தான் தகலோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே சுமுக முடிவு ஏற்படவில்லை.

இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது. அதிரடி ஆதரவு படைகள் என அழைக்கப்படும் துணை ராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்த ராணுவ மோதலில் சிக்கி ஐ.நா. பணியாளர்களும் உயிரிழந்தனர்.

சர்வதேச சட்டங்களை மீறி நடந்த இந்த வன்முறை தாக்குதலில் சூடானின் பள்ளி, மருத்துவமனை உள்ளிட்டவையும் சூறையாடப்பட்டன. இந்த மோதல்களுக்கு அமெரிக்கா, சீனா, ரஷியா, எகிப்து, சவுதி அரேபியா, ஐ.நா. அமைப்புகள், ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஆப்பிரிக்க கூட்டமைப்பு ஆகியவை கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், எல்-பாஷெர் பகுதியில் திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பொதுமக்களில் 30 பேர் மற்றும் வீரர்களில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

சூடானில் கடந்த ஆண்டு மோதல் வெடித்ததும், முதலில் தலைநகர் கார்டூமில் தொடங்கி பின்பு, டார்பர் நகருக்கு பரவியது. 2000-ம் ஆண்டில் நடந்த பழைய பகையானது மீண்டும் வன்முறையாக உருவெடுத்து, இனக்குழுக்களுக்கு இடையேயான மோதலாக மாறியது.

சூடானின் மேற்கத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களையும் ராணுவ படைகள் கைப்பற்றி கட்டுக்குள் கொண்டு வந்தன.

இந்த மோதலால், பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். 90 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். பெரிய அளவில் கொள்ளை சம்பவங்களும் நடந்து வருகின்றன. பொதுமக்களில் ஆயிரக்கணக்கானோர் போரால் பாதிக்கப்பட்டு சிக்கியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, பஞ்சம் மற்றும் பெரிய அளவில் மனிதாபிமான நெருக்கடி சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழலில், நடந்துள்ள திடீர் தாக்குதலில் சிக்கி 47 பேர் உயிரிழந்து உள்ளனர்.

நகரை அழித்து விடும் நோக்கில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது என அந்நாட்டின், நடுநிலை வகித்த அரசியல்வாதியான மின்னி மின்னாவி கூறியுள்ளார். எனினும், கடந்த ஆண்டு நவம்பரில் போரில் இணையும் முடிவை அவர் வெளியிட்டார். அவருடன், ஜிப்ரில் இப்ராகிம் என்பவரும் போரில் ஈடுபடும் முடிவை வெளியிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com