

காபூல்,
ஆப்கானிஸ்தானில் ஊரக மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு மந்திரியின் அலுவலகத்தை வெளிநாட்டு ஆலோசகர்கள் பார்வையிட நேற்று வந்திருந்தனர். இந்நிலையில் திடீரென மந்திரி அலுவலக வாசலில் தற்கொலைப் படையினர் குண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் அங்கிருந்த பாதுகாப்பு வீரர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட 7 பேர் உடல் சிதறி இறந்தனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
வெளிநாட்டு ஆலோசகர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது மந்திரியை இலக்காக வைத்து நடத்தப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். மற்றும் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலால் இறந்தவர்கள் குறித்த அறிக்கையை ஐ.நா. வெளியிட்ட சில மணி நேரத்தில் இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.