

காபூல்,
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் தஸ்த் இ பார்சி பகுதியில் அமைந்துள்ள வாக்காளர் பதிவு மையத்தில், நேற்று காலையில் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டி வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்து கொடூர தாக்குதலை அரங்கேற்றினார். இதில் அங்கு குழுமியிருந்த ஏராளமான பொதுமக்கள் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர்.
இந்த பயங்கர தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் உயிரிழந்தோரின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், மேலும் 21 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களையும் சேர்த்து இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.