ஆப்கானிஸ்தானில் மசூதிக்கு வெளியே தற்கொலைப்படை தாக்குதல்; 29 பேர் சாவு

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள மசூதிக்கு வெளியே தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. 29 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த தாக்குதலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்தி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் மசூதிக்கு வெளியே தற்கொலைப்படை தாக்குதல்; 29 பேர் சாவு
Published on

காபூல்,

அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ந் தேதி நடந்த தாக்குதல்களுக்கு பிறகு, அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.

அங்கு ஆட்சியில் இருந்து தலீபான்களை விரட்டியடித்தது.

ஆனாலும் ஆப்கானிஸ்தான் படையினராலும், அமெரிக்க கூட்டுப்படையினராலும் தலீபான்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை.

அங்கு தலீபான்களுக்கும், ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகளுக்கும் இடையேயான மோதல்களைப் பயன்படுத்தி, ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால்பதித்து வேரூன்ற தொடங்கினர். பல்வேறு நாசவேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷகி ஷியா மசூதியில் நேற்று பாரசீக புத்தாண்டு (நொரவுஸ்) கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்று புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடிக்கொண்டு இருந்தனர். ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டிருந்தனர்.

மசூதிக்கு வெளியேயும் திரளானோர் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தன் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு வந்து, அவற்றை வெடிக்க வைத்தார்.

பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியதால் அந்தப் பகுதியே புகை மண்டலமாக மாறிப்போனது.

அங்கிருந்த மக்கள் பதறியடித்துக்கொண்டு, நாலாபுறமும் சிதறி ஓடினர். அந்தப் பகுதி முழுவதும் ரத்தக்களறியானது.

தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து சுற்றி வளைத்தனர். அதே நேரத்தில் மீட்பு படையினர், ஆம்புலன்சுகளுடன் விரைந்தனர்.

சம்பவ இடத்தில் 29 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இதில் 18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடம் அளிப்பதாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

தாக்குதல் நடந்த பகுதியில்தான் அலி அபாத் மருத்துவமனையும், காபூல் பல்கலைக்கழகமும் அமைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com