ஆப்கானிஸ்தானில் பயங்கரம் மசூதியில் அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல் 37 பேர் உடல் சிதறி பலி

ஆப்கானிஸ்தானில் மசூதியில் அடுத்தடுத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 37 பேர் உடல் சிதறி பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரம் மசூதியில் அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல் 37 பேர் உடல் சிதறி பலி
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தலீபான்களின் ஆட்சி நடந்து வந்தது. அமெரிக்க படையெடுப்புக்கு பின் தலீபான்கள் ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது.

இந்த சூழலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஆப்கானிஸ்தான் மீண்டும் தலீபான்களின் வசமாகி இருக்கிறது. அங்கு ஆட்சியில் இருந்த ஜனநாயக அரசை அகற்றிவிட்டு புதிய இடைக்கால அரசை தலீபான்கள் அமைத்துள்ளனர்.

தலீபான்களின் கடந்த கால ஆட்சியின் போது, ஆப்கானிஸ்தானின் சிறுபான்மை இனமான ஷியா பிரிவு முஸ்லிம்கள் கடும் சித்ரவதைக்கு ஆளாகினர். ஆனால் இந்த முறை தங்களின் ஆட்சியில் ஷியா பிரிவு முஸ்லிம்களை பாதுகாக்க தலீபான்கள் உறுதிபூண்டுள்ளனர்.

தலீபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருவருமே சன்னி பிரிவு முஸ்லிம்கள் ஆவர். ஆனால் அவர்கள் சித்தாந்தத்தால் கடுமையாக பிளவுபட்டுள்ளனர். மேலும் பல சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுள்ளனர்.

மசூதிகளில் தொடர் குண்டுவெடிப்பு

அந்த வகையில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நாள் முதலே ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஷியா பிரிவு முஸ்லிம்களையும், தலீபான்களையும் குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக கடந்த சில வாரங்களாக ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதிகளில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

கடந்த 8-ந் தேதி குண்டூஸ் மாகாணத்தின் தலைநகர் குண்டூசில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 46 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் காந்தஹாரில் உள்ள மிகப்பெரிய மசூதியில் நேற்று அடுத்தடுத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதல் அந்த நாட்டை அதிரவைத்துள்ளது.

அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல்

காந்தஹார் மாகாணத்தின் தலைநகர் காந்தஹாரில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதியில் நேற்று மதியம் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. உள்ளூரை சேர்ந்த 500-க்கும் அதிகமான ஷியா பிரிவு முஸ்லிம்கள் இந்த தொழுகையில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் உடலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்த பயங்கரவாதிகள் 2 பேர் மசூதியின் நுழைவாயிலில் நின்று குண்டுகளை வெடிக்க செய்தனர். பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது.

மசூதியில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த அனைவரும் பீதியில் உறைந்து போயினர். என்ன நடக்கிறது என அவர்கள் சுதாரிப்பதற்குள் அடுத்து 2 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் மசூதிக்குள் ஓடி சென்று குண்டுகளை வெடிக்க செய்தனர்.

37 பேர் உடல் சிதறி பலி

அடுத்தடுத்து நடந்த இந்த தற்கொலைப்படை தாக்குதல்களில் 37 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com