

டமாஸ்கஸ்,
சிரியாவில் அரசுக்கு எதிரான வன்முறையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வர அரசாங்கம் ராணுவத்தின் துணையுடன் தாக்குதல நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பொதுமக்களில் லட்சக்கணக்கானோர் பலியாகி விட்டனர்.
இந்நிலையில், ஐ.எஸ். அமைப்பினரும் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த ராணுவத்தினருடன் இணைந்து அமெரிக்க கூட்டு படைகளும் தாக்குதலில் ஈடுபடுகின்றன.
இந்த நிலையில், டமாஸ்கஸ் நகரின் கிழக்கே இன்று காலை வெடிகுண்டுகளை ஏற்றி கொண்டு 3 கார்கள் வந்துள்ளன. அவற்றை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனை அடுத்து அவற்றில் 2 கார்கள் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் வைத்து அதில் இருந்த வெடிகுண்டுகள் அழிக்கப்பட்டன.
ஆனால் டமாஸ்கஸ் நகரினுள் புகுந்த 3வது கார் தஹ்ரீர் சதுக்கத்தில் வைத்து போலீசாரால் சூழப்பட்ட நிலையில் அதில் இருந்த தற்கொலை வெடிகுண்டு தீவிரவாதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளான். இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர்.
சிரியாவில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நேற்று டமாஸ்கஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். 35 பேர் காயமடைந்தனர்.