

மாலே,
மாலத்தீவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் அதிபராக இருந்த முகமது நஷீத், பொதுமக்கள் போராட்டம் மற்றும் ராணுவ நெருக்கடி காரணமாக கடந்த 2012-ஆம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யாமீன், பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் நஷீத் மீது வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் நஷீதுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதையடுத்து, மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 2016-ஆம் ஆண்டு பிரிட்டன் சென்ற அவருக்கு, அந்த நாடு புகலிடம் அளித்தது. இதைத்தொடர்ந்து இலங்கையில் புகலிடம் அடைந்தார். மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் மாலத்தீவுக்கு முகம்மது நஷீத் திரும்பியுள்ளார். கடந்த மாதம் முகம்மது நஷீத்துக்கு விதிக்கப்பட்டு இருந்த தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த சூழலில், முகம்மது நஷீத் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகம்மது நஷீத் மீது தவறான குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளது, விசாரணை நீதிமன்றம் விசாரணையை தொடரக்கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பை அறிந்ததும், நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே கூடியிருந்த நஷீத் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.