

சிட்னி,
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கிய பின்பு உலக நாடுகள் அனைத்துமே அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மட்டுமே தங்களது முழுக் கவனதையும் செலுத்தி வருகின்றன. அரசு ஆஸ்பத்திரிகள் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை குணப்படுத்துவதற்கே முக்கியத்துவம் அளிக்கின்றன.
இதனால், கடந்த மார்ச் மாதம் முதலே பல நாடுகளின் ஆஸ்பத்திரிகளில் அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மூளையில் நோய் பாதிப்பு, இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கான அவசர சிகிச்சைகள்தான் தற்போது அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாகாண அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளை மட்டும் ஆஸ்பத்திரிகள் விரைவில் மேற்கொள்ள அனுமதிக்கலாமா? என்பது குறித்து அடுத்தவாரம் முடிவு செய்கிறது.
இதனிடையே, இடுப்பு மூட்டு மாற்று, முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் இன்னும் ஓராண்டு காலம் வரை தள்ளிப்போகலாம் என்று நியூசவுத்வேல்ஸ் ஆஸ்பத்திரிகளின் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் பேசும் போது, ஆஸ்பத்திரிகளின் முழு கவனமும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி திரும்பியுள்ள இந்த கடினமான நேரத்தில் அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் ஓராண்டுக்கும் மேலாக தள்ளிப்போகலாம். இது தவிர்க்க முடியாத சவாலான ஒன்றாகும் என்றனர்.
நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் மட்டும் 88 ஆயிரம் பேர் அறுவை சிகிச்சைக்கான காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.