

கொழும்பு,
இலங்கையில் நடைபெறும் 2-வது இந்திய பெருங்கடல் மாநாட்டில் கலந்து கொள்ள அந்நாட்டிற்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்திய பெருங்கடல் மாநாட்டிற்கிடையே, சுஷ்மா சுவராஜ் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மரபனாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இரு தரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து இலங்கை வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- வளர்ச்சி மற்றும் சுபிட்சத்துக்கான கூட்டு இதுவாகும். வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் , திலக் மரபனாவுடன் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மரபனாவுடன் முக்கிய விவகாரங்கள் குறித்து சுஷ்மா சுவராஜ் ஆலோசனை நடத்தியதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரை சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை பயணம் செய்ததை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் 76 தமிழக மீனவர்களை இலங்கை அண்மையில் விடுவித்தது.