

கோதன்பர்க்
ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். இந்த பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளன. அவருடைய பயணம் இன்று நிறைவடைந்ததும் சுவீடன் நாட்டுக்கு புறப்பட்டார்.
அந்நாட்டின் கோதன்பர்க் நகரை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை அந்நாட்டு அரசியல் மற்றும் வணிக தலைவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் ஆர்வத்துடன் வரவேற்றனர்.
இந்த பயணத்தில், சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் மற்றும் பிற ஐரோப்பிய தலைவர்களையும், சுவீடனின் தலைமை செயலதிகாரிகளையும் சந்தித்து, வர்த்தகம், முதலீட்டை வலுப்படுத்தவும் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றியும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளார்.
இதுதவிர செயற்கை நுண்ணறிவு, பசுமை போக்குவரத்து, நவீன உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஆலோசனைகளில் ஈடுபட உள்ளார்.
இந்த நிலையில், சுவீடன் நாட்டின் உயரிய, ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ் என்ற சிறப்புமிக்க விருது பிரதமர் மோடிக்கு இன்று வழங்கப்பட்டது. ஒரு நாட்டின் உயரிய தலைமைக்கு வழங்கப்படும் மிக சிறந்த அங்கீகாரம் மற்றும் கவுரவம் ஆகும். உலகளவில் பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 31-வது பெரிய கவுரவம் இதுவாகும்.