

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள நகரங்களை மீட்க சிரிய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டிற்கு ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் ஆதரவு பெற்ற சிரிய ஜனநாயக படைகளும், ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன.
சிரியாவின் பழமையான நகரான பல்மைரா நகருக்கு வடகிழக்கே 50 கி.மீட்டர் தொலைவில் அல் சுக்னா என்ற நகரம் உள்ளது. இதனை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களின் கட்டுக்குள் வைத்திருந்தனர்.
இந்த நிலையில், ராணுவ தகவலின் அடிப்படையில் சிரிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், அல் சுக்னா நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர்களின் ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
இதனால் ஹாம்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள மிக பெரிய அல் சுக்னா நகரை சிரிய ராணுவம் முழுமையாக தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்நகருக்கு 50 கி.மீட்டருக்கு தொலைவில் டெய்ர் அல்-ஜார் மாகாணம் அமைந்துள்ளது. இது சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரின் ஆதிக்கம் நிறைந்த கடைசி மாகாணம் ஆகும். சமீபத்தில் இதனை இலக்காக கொண்டு சிரிய அரசு படைகள் மேற்கிலிருந்து முன்னேறி வருகிறது.