சிரியா: அரசுப்படைக்கும், ஆயுதக்குழுவுக்கும் இடையே தற்காலிக சண்டை நிறுத்தம்

ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்ததில் குர்திஷ் ஆயுதக்குழுவின் சிரியா ஜனநாயகப்படை முக்கிய பங்காற்றியது.
டமாஸ்கஸ்,
சிரியாவில் அகமது ஹுசேன் அல் சாரா தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இதனிடையே, அந்நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்ததில் குர்திஷ் ஆயுதக்குழுவின் சிரியா ஜனநாயகப்படை முக்கிய பங்காற்றியது. அந்த ஆயுதக்குழு தற்போது உள்நாட்டு போரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை கண்காணித்து வருகிறது.
இதனிடையே, அந்த ஆயுதக்குழுவை சிரியா அரசுப்படையுடன் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பாதுகாப்பை குர்திஷ் ஆயுதக்குழு திரும்பப்பெற்றது. இதன் மூலம் சிறைகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஐ.எஸ். பயங்கரவாதிகள் தப்பிச்செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சிரியாவில் குர்திஷ் ஆயுதக்குழுவினர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை சிரியா அரசுப்படைகள் கைப்பற்ற நடவடிக்கை எடுத்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், சிரியாவில் அரசுப்படையினருக்கும் குர்திஷ் ஆயுதக்குழுவினருக்கும் இடையே தற்காலிக சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை அமலுக்கு வந்த சண்டை நிறுத்தம் 4 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






