சிரியாவில் அரசாங்கம் இன்னும் செயல்படுகிறது- பிரதமர் தகவல்


சிரியாவில் அரசாங்கம் இன்னும் செயல்படுகிறது- பிரதமர் தகவல்
x
தினத்தந்தி 9 Dec 2024 9:40 PM IST (Updated: 9 Dec 2024 9:41 PM IST)
t-max-icont-min-icon

நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக கிளர்ச்சிக் குழுவினருக்கு பிரதமர் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.

டமாஸ்கஸ்:

சிரியாவில் அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு எதிராக நீண்ட காலமாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக் குழுவினர் நாட்டின் பெரும்பகுதிகளை கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து 50 ஆண்டு கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனால் சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்கள் மற்றும் நீண்ட தூர ராக்கெட்டுகள் தீவிரவாதிகளின் கைகளில் சிக்காமல் இருக்க வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் அரசு படைகள் வெளியேறிய பகுதிகளில் இஸ்ரேல் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை கைப்பற்றியுள்ளது.

வடக்கு சிரியாவில், அமெரிக்காவின் ஆதரவுடன் குர்திஷ் தலைமையிலான படைகளிடமிருந்து மன்பிஜ் நகரத்தை எதிர்க்கட்சி படைகள் கைப்பற்றியதாக துருக்கி கூறியது. கடந்த காலத்தில் சண்டையிட்ட ஆயுதக் குழுக்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதை இது காட்டுகிறது.

ஆசாத் நாட்டை விட்டுச் சென்ற பிறகு அவரது ஆட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் பெரும்பாலான உயர் அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர். அதேசமயம், பிரதமர் முகமது காஜி ஜலாலி தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், புதிய தலைமையை கொண்டு வருவதற்காகவும் கிளர்ச்சிக் குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.

சிரியாவில் அரசாங்கம் இன்னும் செயல்பட்டு வருவதாகவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் பிரதமர் முகமது காஜி ஜலாலி கூறி உள்ளார்.

"அதிகார மாற்றம் சுமுகமாக இருக்கும் வகையில் பணியாற்றி வருகிறோம். பாதுகாப்பு நிலைமை முன்னேற்றம் அடைந்துள்ளது. கிளர்ச்சியாளர்களுடன் அரசாங்கம் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. கிளர்ச்சிக் குழு தலைவர் அபு முகமது அல்-கோலானி என்று அழைக்கப்படும் அஹ்மத் அல்-ஷாராவை சந்திக்க தயாராக இருக்கிறேன்" என்றும் அவர் கூறினார்.

1 More update

Next Story