

காபுல்,
ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும், தலிபான்களுக்கும் இடையே அதிகளவில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. தலிபான்களை அடக்குவதற்காக ராணுவம் தாக்குதல் நடத்துவதும், ராணுவத்தினர் மீது தலீபான்கள் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்துவதும் அவ்வபோது நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை ஆப்கானிஸ்தானில் உள்ள குண்டூஸ் என்ற மாகாணத்தின் கானாபாத் மாவட்டத்தில் தலிபான்கள் பதுங்கியிருப்பதாக ஆப்கான் ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ராணுவத்தினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த சூழ்நிலையில் அங்கு பதுங்கியிருந்த தலிபான்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழந்ததாக ஆப்கான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தேடுதல் நடவடிக்கையில் 5 தலிபான்கள் சிறைபிடிக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.