ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது தலீபான்கள் தாக்குதல்; பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.
ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது தலீபான்கள் தாக்குதல்; பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். பல்வேறு மாகாணங்களை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அவர்கள் ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

அவர்களின் கொட்டத்தை ஒடுக்க ஆப்கானிஸ்தான் ராணுவமும், அமெரிக்க படையும் போராடி வருகின்றன. அதே சமயம் நாட்டில் அமைதியை கொண்டுவர தலீபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தவும் அமெரிக்கா முனைப்பு காட்டி வருகிறது.

ஆனால் தலீபான் பயங்கரவாதிகளோ அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வராமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். அதே சமயம் தலீபான்களை வீழ்த்துவதற்காக ஆப்கான் படை வீரர்கள் நாடு முழுவதும் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் மத்திய பகுதியில் அமைந்துள்ள வார்டாக் மாகாணத்தின் தலைநகர் மைதான் ஷாரில் உள்ள ஆப்கான் சிறப்பு படை வீரர் களுக்கான ராணுவ தளத்தின் மீது நேற்று தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தினர்.

இதில் முதலில் ஒரு பயங்கரவாதி வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்து ராணுவ தளத்தின் மீது மோதி வெடிக்க செய்தார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. அதனை தொடர்ந்து மற்றொரு காரில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் ராணுவ தளத்துக்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதையடுத்து, ராணுவ வீரர்கள் தங்களது துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

எனினும் பயங்கரவாதிகள் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 12 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவித்தநிலையில், தற்போது பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

இதையடுத்து கூடுதல் ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு ராணுவ தளம் சுற்றிவளைக்கப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதன் பின்னர் படுகாயம் அடைந்த நபர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com