

காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்து வந்த நீண்டகால போர் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. அஷ்ரப் கனி தலைமையிலான அரசை கைப்பற்றி தலீபான்கள் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டில் ஆட்சி பொறுப்பேற்றனர். தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பெண்கள் அரசு பணிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரக அரசு சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில், தேடுதல் படையினர் ஒவ்வொரு வீடாக சென்று சேருவதற்கு முன்பே, ஆப்கானிஸ்தானியர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள ஆயுதங்கள், அரசு சொத்துகள் மற்றும் சட்டவிரோத பொருட்களை தாமாகவே முன்வந்து ஒப்படைக்க வேண்டும். கடத்தல்காரர்கள் மற்றும் திருடர்கள் பற்றிய தகவல்களையும் பகிர வேண்டும். அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம் என தெரிவித்து உள்ளது.
எனினும், இந்த நடவடிக்கைக்கு எண்ணற்ற சர்வதேச அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மக்களின் தனிப்பட்ட விசயத்திற்குள் தலீபான்கள் அத்துமீறுகின்றனர் என்று குற்றச்சாட்டும் தெரிவிக்கப்பட்டது.