

காபூல்,
ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடிக்கிறது. இந்த உள்நாட்டு போரால் அந்தநாடு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் அங்கு வருகிற 28-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 20-ந்தேதியே நடக்க வேண்டிய இந்த தேர்தல் பல்வேறு காரணங்களால் 2 முறை ஒத்திவைக்கப்பட்டு, தற்போது நடக்க உள்ளது.
இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி மீண்டும் போட்டியிடுகிறார். இந்த சூழலில் தலீபான்களுடன் நடத்தி வந்த சமரச பேச்சுவார்த்தையை அமெரிக்கா திடீரென ரத்து செய்தது.
இதனால் அமெரிக்கா மீதும், ஆப்கானிஸ்தான் அரசு மீதும் கோபத்தில் இருக்கும் தலீபான்கள், அதிபர் தேர்தலை சீர்குலைக்க பயங்கர தாக்குதல்களை நடத்துவார்கள் என்ற அச்சம் நிலவுகிறது.
இதனால் நாடு முழுவதும் சுமார் 70 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. எனினும் தேர்தல் பிரசார கூட்டங்கள் மற்றும் பேரணியை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வடக்கு மாகாணமான பர்வானில் உள்ள சரிக்கார் நகரில் அதிபர் அஷ்ரப் கனியின் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக அங்குள்ள மைதானத்தில் அஷ்ரப் கனியின் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் அஷ்ரப் கனி பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், பிரசார கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த மைதானத்தின் நுழைவாயில் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு கரும்புகை மண்டலம் உருவானது. குண்டு வெடிப்பால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றமும், பீதியும் உருவானது.
அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் குண்டு வெடிப்பில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். 30 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அதே சமயம் இந்த குண்டுவெடிப்பில் அதிபர் அஷ்ரப் கனி காயங்கள் இன்றி உயிர் தப்பினர். அவரது பாதுகாவலர்கள் அவரை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர். குண்டு வெடிப்பை தொடர்ந்து, அங்கு ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு அந்த பகுதி அவர்களது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, படுகாயம் அடைந்த நபர்கள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் தலீபான் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
இதற்கிடையே இந்த குண்டு வெடிப்பு நடந்த சில மணி நேரத்துக்கு பிறகு தலைநகர் காபூலில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகே குண்டு வெடித்தது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர்.