

காபூல்,
ஆப்கானிஸ்தானின் லக்மான் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள அலிஷிங் என்ற பகுதியில் இன்று அதிகாலை 6 மணியளவில், பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில், ஆப்கான் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 பேர் பலியாகினர். மேலும் 36 பேர் படுகாயமடைந்தனர்.
சக்திவாய்ந்த வெடிபொருட்கள் நிரம்பிய வாகனத்தை வெடிக்க வைத்து இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர். காவல்துறை தலைமை அலுவலகத்தின் அருகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு தலீபான் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.
தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகே இருந்த மதராஸா கட்டிடம் பலத்த சேதமடைந்தது. இதன் காரணமாக கட்டிடத்தின் உள்ளே இருந்த மாணவர்களில் 20 பேர் காயமடைந்தனர். காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் இணைந்து காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு ஆப்கான் மக்களுக்கு தலீபான் அமைப்பு கூறியது. தேர்தலின் போது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் கடந்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இது போன்ற பல தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. தேர்தல் தொடர்பான பயங்கரவாத தாக்குதல்களில் இதுவரை 85 பொதுமக்கள் பலியாகி இருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.