வடகொரியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை : அமெரிக்க மந்திரி அறிவிப்பு

அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பாக வடகொரியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த தயார் என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அறிவித்தார்.
வடகொரியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை : அமெரிக்க மந்திரி அறிவிப்பு
Published on

வாஷிங்டன்,

அணுகுண்டுகளை வெடித்தும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்தும் வந்த வடகொரியா, அணு ஆயுதங்களை முழுமையாக கை விட இப்போது சம்மதித்து உள்ளது.

இது தொடர்பாக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரியா சென்று அந்த நாட்டின் தலைவரான கிம் ஜாங் அன்னுடன் 3வது சுற்று பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது வடகொரியாவின் முக்கிய ஏவுகணை என்ஜின் சோதனை தளமான டாங்சாங் ரி தளத்தை நிரந்தரமாக மூடி விடுவதற்கு கிம் ஜாங் அன் சம்மதித்தார். அமெரிக்காவும் பரஸ்பர நடவடிக்கை எடுத்தால், யாங்பியான் அணு ஆயுத தளத்தை மூடி விடவும் தயார் என கிம் ஜாங் அன் கூறி உள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பாக வடகொரியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த தயார் என வாஷிங்டனில் அறிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், வடகொரியா வெளியுறவு மந்திரியை பேச்சு வார்த்தை நடத்த அடுத்த வாரம் நியூயார்க் வருமாறு அழைப்பு விடுத்து உள்ளேன். எங்கள் நோக்கம், 2021ம் ஆண்டு ஜனவரிக்குள் அணு ஆயுதங்களை வடகொரியா முழுமையாக கைவிட்டு விட வேண்டும் என்பதுதான் என குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும்போது, வியன்னாவில் வடகொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி ஸ்டீபன் பீகன்னை சந்திப்பதற்கு வடகொரியா பிரதிநிதிகள் விரைவில் வருமாறும் அழைப்பு விடுத்து உள்ளேன் என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே பியாங்யாங்கில் வடகொரியாவும், தென்கொரியாவும் ஒப்பந்தம் செய்து கொண்டதை சீனா வரவேற்று உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com