தனிஷ் சித்திக் தலிபான்களால் கொடூர கொலை; அமெரிக்கா திடுக் தகவல்

இந்திய புகைப்பட செய்தியாளர் தனிஷ் சித்திக்கை தலிபான்கள் கொடூர கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை அமெரிக்க ஊடகம் தெரிவித்து உள்ளது.
தனிஷ் சித்திக் தலிபான்களால் கொடூர கொலை; அமெரிக்கா திடுக் தகவல்
Published on

வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க அரசு ராணுவ வீரர்களை பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் கந்தகாரில் நடந்த தலீபான்களுக்கு எதிரான போரில், இந்தியாவை சேர்ந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்பட செய்தியாளர் தனிஷ் சித்திக் (வயது 38) கடந்த 16ந்தேதி மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் உள்பட பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில், கொரோனா 2வது அலையின்போது கங்கை நதிக்கரையில் பிணங்கள் எரிக்கப்பட்டது, ரோஹிங்கியா முஸ்லிம்களின் துயர வாழ்வு குறித்து இவர் எடுத்த புகைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.

ரோஹிங்கியாக்களின் துயர வாழ்வு பற்றி பதிவு செய்ததற்காக புலிட்சர் விருது பெற்றவர். உலகம் முழுவதும் இவரது மறைவு பெரும் சோகம் ஏற்படுத்தியது. பத்திரிகையாளர்கள் சங்கம் இதுபற்றி விசாரணை நடத்த கோரியுள்ளது.

இந்நிலையில் புகைப்பட செய்தியாளர் தனிஷ் சித்திக்கின் மரணத்தில் தங்கள் பங்கு எதுவும் இல்லை எனவும், அவர் உயிரிழக்க நாங்கள் காரணமில்லை எனவும் தலீபான்கள் தெரிவித்தனர்.

இரு தரப்பினர் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் அவர் எப்படி பலியானார் என்று தங்களுக்கு தெரியாது என அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் கூறினார்.

போர்க்களத்திற்கு வரும் பத்திரிகையாளர்கள் தங்களிடம் முன்கூட்டியே அதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு தெரிவித்தால் அவர்களை பத்திரமாக பார்த்து கொள்வோம் எனவும் அவர் கூறினார். இதனால், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருடன் செய்தி சேகரிக்க சென்ற சித்திக்கின் மரணத்தில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்ந்து நீடித்தது.

இந்நிலையில், தனிஷ் சித்திக் தலிபான்களால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார் என அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கந்தகார் நகரின் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் படை வீரர்களுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களை படம் பிடிக்க சென்றிருந்தபோது, இரு தரப்பு மோதலில் நடந்த துப்பாக்கி சூட்டில் சித்திக் பலியானார் என கூறப்பட்டது.

இந்த நிலையில், அவர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்படவில்லை. அவரை நன்கு தெரிந்து கொண்ட பின்னரே தலிபான்கள் கொடூரமாக கொலை செய்து உள்ளனர் என அமெரிக்க பத்திரிகையான வாஷிங்டன் எக்சாமினர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், போரில் தலிபான்கள் இரு அணிகளாக பிரிந்துள்ளனர். சித்திக் மற்றும் அவருடன் இருந்த 3 ஆப்கானிஸ்தான் படை வீரர்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஏற்பட்ட காயம் காரணமாக உள்ளூர் மசூதி ஒன்றில் சித்திக் முதலுதவி பெற்று கொண்டிருந்தார்.

சித்திக் மசூதியில் இருக்கும் தகவலை அறிந்த தலிபான்கள், சித்திக்கை பிடித்து வந்து, அவருடைய அடையாளத்தை உறுதி செய்து கொண்டு, அவரை தலையில் தாக்கியதுடன், உடலை குண்டுகளால் துளைத்து உள்ளனர். ஆனால் உள்ளூர் விசாரணையில், தலிபான்கள் மசூதியை மட்டும் தாக்கியதாக கூறினர்.

தலிபான்கள் மசூதியில் சித்திக்கை பிடித்த போது அவர் உயிருடன் இருந்ததாகவும், சித்திக்கின் அடையாளத்தை சரிபார்த்து பின்னர் அவரையும், அவருடன் இருந்த வீரர்களையும் தூக்கிலிட்டதாகவும் கூறப்படுகிறது. அவரை காப்பாற்ற முயன்ற ஆப்கானிஸ்தான் படை தளபதியும், அவரது குழுவின் மீதமுள்ளவர்களும் உயிரிழந்தனர்.

பொது வெளியில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் சித்திக்கின் முகம் அடையாளம் தெரியும்படி இருந்தாலும், கிடைத்த வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் அவரை துன்புறுத்தி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அமெரிக்க பாதுகாப்பு செயலக ஆலோசகர் மைக்கேல் ரூபின் என்பவரும் உறுதி செய்துள்ளார். தலீபான்கள் சித்திக்கை பிடித்தபோது அவர் உயிருடனேயே இருந்துள்ளார் என்றும், அவரை அடையாளம் கண்டு கொண்டு பின்பு அவரையும், அவருடன் இருந்த வீரர்களையும் படுகொலை செய்துள்ளனர் என்றும் ரூபின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com