ஹார்மூஸ் ஜலசந்தியில் சுங்க கட்டணம்... ஈரான் முடிவை அழகான விசயம் என கூறிய டிரம்ப்

ஈரான் உடன்படவில்லை எனில் கடுமையான தாக்குதல் இருக்கும் என டிரம்ப் கூறினார்.
ஹார்மூஸ் ஜலசந்தியில் சுங்க கட்டணம்... ஈரான் முடிவை அழகான விசயம் என கூறிய டிரம்ப்
Published on

வாஷிங்டன் டி.சி.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்த தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார். மீறினால், ஈரானின் அணு உலைகளை தாக்குவோம் என்றும் கூறினார். இதற்காக ஈரானுக்கு, அமெரிக்கா காலக்கெடு விதித்தது. அதனை நீட்டித்தும் வந்தது. ஆனால், அந்த காலக்கெடு நேற்றிரவு 8 மணி வரையே நீடிக்கும் என டிரம்ப் கூறினார்.

அதன்பின்னர் ஈரான் உடன்படவில்லை எனில் கடுமையான தாக்குதல் இருக்கும் என கூறினார். இதனால், மேற்காசியாவில் பதற்ற நிலை அதிகரித்தது. இந்த சூழலில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வார காலத்திற்கு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஏ.பி.சி. நியூஸ் செய்தி நிறுவன நிருபர் கார்ல் என்பவர் டிரம்ப்பிடம், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் கடந்து செல்ல கூடிய கப்பல்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு செய்திருப்பது பற்றியும், அதனை நீங்கள் அனுமதிப்பீர்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த டிரம்ப், அதனை இரு நாடுகளும் கூட்டாக இணைந்து மேற்கொள்வது பற்றி நாங்கள் யோசித்து வருகிறோம். அது பாதுகாப்புக்கான ஒரு வழியாகும். நிறைய மக்களிடம் இருந்து அது பாதுகாக்கும். அது அழகான ஒரு விசயம் என்று டிரம்ப் கூறினார். இதனால், ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து செல்ல கூடிய கப்பல்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது பற்றிய ஈரானின் முடிவை டிரம்ப் வரவேற்பது போன்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com