17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான்

கலிதா ஜியா தீவிர சிகிச்சையில் உள்ளதால் வங்காள தேச பொதுத்தேர்தலில் தாரிக் பிரதமர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான்
Published on

டாக்கா,

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. அவர் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.இதற்கிடையே ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வங்காளதேச தேசியவாத கட்சி தலைவரான முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (வயது 80) விடுதலை செய்யப்பட்டார்.

சமீபத்தில் அவரது உடல் நிலை மோசமடைந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து லண்டனில் அவரது மகன் தாரிக் ரஹ்மான் (60) வங்காளதேசத்துக்கு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டதால் தாரிக் ரஹ்மான் நாட்டை விட்டு வெளியேறி, இங்கிலாந்தின் லண்டனில் வசித்து வந்தார்.

2008-ம் ஆண்டு தாரிக் ரஹ்மான் கைது செய்யப் பட்டார். பின்னர் அவரை அரசாங்கம் விடுவித்த பிறகு 2008-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் வசித்து வந்தார்.தற்போது தாரிக் ரஹ்மான் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 17 ஆண்டுக்கு பிறகு அவர் இன்று வங்காள தேசத்துக்கு திரும்பினார். அவர் தனது மனைவி ஜுபைதா ரஹ்மான், மகள் ஜைமாரஹ்மான் ஆகியோருடன் லண்டனில் இருந்து விமானத்தில் புறப்பட்டார். தாரிக் ரஹ்மான் பயணித்த விமானம் இன்று காலை 10 மணிக்கு சில்ஹெட் உஸ்மானி விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர் அந்த விமானம் அங்கிருந்து புறப்பட்டு டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

அங்கு தாரிக் ரஹ்மானுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வங்காளதேச தேசியவாத கட்சி ஏற்பாடு செய்திருந்தது. ஏராளமான கட்சி தொண்டர்கள் திரண்டு வரவேற்றனர். சாலையின் இருபுறமும் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கட்சி கொடியை அசைத்தப் படி தாரிக் ரஹ்மானை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

அதன்பின் அவர் டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாய் கலிதா ஜியாவைச் சந்தித்தார். வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிடவும் வங்காளதேச தேசியவாத கட்சி செயல் தலைவரான தாரிக் ரஹ்மான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அவர் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். வங்காளதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் சுட்டு கொல்லப்பட்டதால் சமீபத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் தாரிக் ரஹ்மாn நாடு திரும்பி உள்ளது அங்கு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com