பிரான்சில் வரி ஏய்ப்பு: கூகுள் நிறுவனத்துக்கு ரூ.7,600 கோடி அபராதம்

பிரான்சில் வரி ஏய்ப்பு செய்ததாக, கூகுள் நிறுவனத்துக்கு அந்நாட்டு அரசு ரூ.7,600 கோடி அபராதம் விதித்தது.
பிரான்சில் வரி ஏய்ப்பு: கூகுள் நிறுவனத்துக்கு ரூ.7,600 கோடி அபராதம்
Published on

பாரீஸ்,

கூகுள், ஆப்பிள் போன்ற பெருநிறுவனங்களுக்கு உலகெங்கும் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனங்கள் எங்கெல்லாம் தங்கள் கிளைகளை வைத்திருக்கின்றனவோ, அங்கெல்லாம் அந்தந்த நாட்டின் விதிகளுக்கேற்ப வரிகளை செலுத்தவேண்டும்.

சில நாடுகளில் வரி குறைவாக இருக்கும். சில நாடுகளில் அதிகமாக இருக்கும். அப்படி அதிகப்படியான வரியை தவிர்க்க பெருநிறுவனங்கள் பல்வேறு வரி தவிர்ப்பு முறைகளை கையாண்டு வருகின்றன. அந்த வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இயங்கும் கூகுள் நிறுவனம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கடந்த 2016-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ரூ.13 ஆயிரம் கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த விசாரணையில் கூகுள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரான்ஸ் அரசு உடனான வரி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் வரி ஏய்ப்புக்கான அபராத தொகை 500 மில்லியன் யுரோ (ரூ.3 ஆயிரத்து 933 கோடி) மற்றும் வரி பாக்கி தொகை 465 மில்லியன் யுரோ (ரூ.3 ஆயிரத்து 659 கோடி) ஆகியவற்றை வழங்க கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com