'தாக்குதலை நிறுத்தாவிட்டால் தெஹ்ரான் பற்றி எரியும்' - இஸ்ரேல் எச்சரிக்கை

இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மீது ஈரான் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.
Image Courtesy : PTI
Image Courtesy : PTI
Published on

ஜெருசலேம்,

மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என பெயரிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் உடனடியாக தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும், ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிகர காவல்படையின் தலைவர் ஹொசைன் சலாமி உள்ளிட்ட பல்வேறு முக்கிய ராணுவ தளபதிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பலியானதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதேநேரம் இந்த தாக்குதல் மூலம் இஸ்ரேல் போர் பிரகடனம் செய்திருப்பதாக ஈரான் தெரிவித்து உள்ளது. இதற்கான விளைவுகளை அந்த நாடு அனுபவிக்கும் என ஈரான் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி அறிவித்து உள்ளார். அத்துடன் இஸ்ரேலுக்கு எதிரான பதிலடியை ஈரானும் தொடங்கி உள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ஈரான் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஈரான் தாக்குதலை நிறுத்தாவிட்டால் தெஹ்ரான் பற்றி எரியும் என்று இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை மந்திரி இஸ்ரேல் காட்ஸ் கூறுகையில், "ஈரான் மக்களை பணயக் கைதிகளாக மாற்றி, இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தெஹ்ரான் மக்கள் பெரும் விலை கொடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலையை ஈரான் தலைவர் உருவாக்குகிறார். இஸ்ரேல் மீதான தாக்குதலை அலி காமெனி நிறுத்தாவிட்டால் தெஹ்ரான் பற்றி எரியும்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com