பதற்றமான சூழல்: அமீரகத்தில் டிரோன் பறக்க தடை நீடிப்பு
அபுதாபி,
அமீரக பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போது நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அமீரக வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எனினும், குறிப்பிட்ட சில விமான சேவைகள் மட்டும் இயக்க அனுமதி வழங்கப்பட் டுள்ளது. மேலும் நாட்டில் பாதுகாப்பு நிலை உஷார்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இதனை கருத்தில் கொண்டு நாட்டில் கிளைடர், சிறு விமானங்கள் மற்றும் டிரோன் பறக்க ஏற்கனவே ஒரு வாரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் நாட்டின் வான் எல்லையில் எந்தவிதமான டிரோன் மற்றும் கிளைடர், விமானங்கள் பறக்க கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில், அமீரக வான்பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. விதிமீறலில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே டிரான் உள்ளிட்டவற்றை இயக்குபவர்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி நடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை கருதியே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள் ளது. மேலும் டிரோன் உள்ளிட்ட சிறு விமானங்களை இயக்குவதால் பொது மக்களுக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பது கவனத்தில் கொள்ளப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலைமை சீராவதை பொறுத்து கிளைடர், சிறு விமானங்கள் மற்றும் டிரோன் பறப்பதற்கான தடை விலக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும். எனவே இது குறித்து வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

