மெக்சிகோவில் பயங்கரம்: போதைப்பொருள் கடத்தல் கும்பல் தாக்குதலில் 9 பேர் பலி

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருமண விழாவுக்கு சென்றபோது அவர்களுக்கு இந்த சோக முடிவு ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவில் பயங்கரம்: போதைப்பொருள் கடத்தல் கும்பல் தாக்குதலில் 9 பேர் பலி
Published on

மெக்சிகோ சிட்டி,

அமெரிக்காவில் இருந்து வந்து மெக்சிகோவில் குடியேறியவர், ரோனிட்டா. இரட்டை குடியுரிமை பெற்ற இந்தப் பெண்ணுக்கு 4 குழந்தைகள்.

இவர்கள், மெக்சிகோவில் லா மோரா நகரத்தில் கிறிஸ்தவ பழங்குடியின மக்களுக்கான குடியிருப்பில் வசித்து வந்தனர். ரோனிட்டாவுடன் அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு குடிபெயர்ந்த அவரது நெருங்கிய உறவினர்கள் பலரும் அதே குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் அங்கு பவிஸ்ப் நகரில் உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ரோனிட்டா தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் லா மோரா நகரில் இருந்து புறப்பட்டு சென்றார்.

மொத்தம் 17 பேர் 3 கார்களில் பயணம் செய்தனர்.

அவர்களது கார்கள் பவிஸ்ப் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், ஆயுதம் ஏந்தி வந்த மர்ம கும்பல் அவர்கள் கார்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டது.

ரோனிட்டாவும், அவரது குழந்தைகளும் பயணம் செய்த காரின் கியாஸ் டேங்கில் குண்டு பாய்ந்தது.

இதில் கியாஸ் டேங்க் பலத்த சத்தத்துடன் வெடித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அத்துடன், அந்தக் காரை தொடர்ந்து ரோனிட்டாவின் உறவினர்கள் வந்த கார்களுக்கும் தீ பரவியது. அனைவரும் அலறி துடித்தனர்.

இந்த கோர தாக்குதலில் ரோனிட்டா மற்றும் அவரது 4 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதே போல் அவரது உறவுக்கார பெண்களான கிறிஸ்டீனா லாங்போர்ட் ஜான்சன், டவானா லாங்போர்ட் மற்றும் அவரது மகன்கள் டிரேவர் (11), ரோகன் (3) ஆகியோரும் தீயில் கருகி இறந்தனர்.

9 பேரின் உடல்களும் அடையாளம் காண முடியாத வகையில் எரிந்து கரிக்கட்டைகள் ஆகின.

கார்களில் இருந்த மற்ற அனைவரும் துப்பாக்கி குண்டு காயங்களுடனும், தீக்காயங்களுடனும் உயிர் தப்பினர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியது, போதைப்பொருள் கடத்தல் கும்பல் என தெரிய வந்துள்ளது. தங்கள் போட்டி கும்பல் பயணம் செய்த கார்கள் என்று நினைத்தே, அந்த கார்கள்மீது துப்பாக்கிச்சூட்டை போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடத்தி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மெக்சிகோ போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

திருமண விழாவுக்கு சென்றவர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தாக்குதலில் பலியாகி இருப்பது, அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவில் குடியேறியவர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com