லிபியாவில் பயங்கரம் ராணுவ பள்ளி மீது வான்தாக்குதல் : 30 மாணவர்கள் உடல் சிதறி பலி

உள்நாட்டு போர் நடந்து வரும் லிபியாவில் ராணுவ பள்ளிக்கூடத்தின் மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 30 மாணவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
லிபியாவில் பயங்கரம் ராணுவ பள்ளி மீது வான்தாக்குதல் : 30 மாணவர்கள் உடல் சிதறி பலி
Published on

திரிபோலி,

வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் 34 ஆண்டுகள் அதிபராக இருந்த கடாபிக்கு எதிராக 2011-ம் ஆண்டு அங்கு உள்நாட்டுப் போர் வெடித்து, கடாபி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு, கடத்தி கொலை செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 2015-ம் ஆண்டு ஐ.நா. ஆதரவுடன் தேசிய இடைக்கால பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது. எனினும் அங்கு தொடர்ந்து அரசியலில் நிலையற்ற தன்மை உருவானது.

இதனால் அதே ஆண்டு லிபியாவில் மீண்டும் அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போர் மூண்டது. இதனால் லிபியாவில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

தற்போது அங்கு ஐ.நா. ஆதரவு பெற்ற அரசுக்கும், நாட்டின் கிழக்கு பகுதியில் உருவாகி உள்ள போட்டி அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

போட்டி அரசின் லிபிய தேசிய ராணுவத்தின் தளபதியாக பதவி வகித்து வரும் கலிபா கப்தார் தலைமையிலான கிளர்ச்சி படைகள் அரசுக்கு எதிராக சண்டையிட்டு அரசின் வசம் உள்ள நகரங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

அந்த வகையில் அரசுப்படை வசம் உள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கலிபா கப்தார் தலைமையிலான ஆயுத குழுவினர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அங்கு உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்த சண்டையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 2 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் திரிபோலியில் அல்ஹட்பா அல்கத்ரா என்ற இடத்தில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்தில் நேற்று முன்தினம் ஏராளமான மாணவர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

பயிற்சி முடிந்த பிறகு மாணவர்கள் தங்களது அறைகளுக்கு திரும்புவதற்காக அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த பள்ளிக்கூடத்தின் மீது வான்தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் தாக்குதலில் ராணுவ பள்ளி கட்டிடத்தின் பெரும் பகுதி இடிந்து தரைமட்டமானது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த 30 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

எனினும் கலிபா கப்தார் தலைமையிலான கிளர்ச்சி படையே இந்த தாக்குதலை நடத்தியிருக்கும் என அந்த நாட்டு அரசு குற்றம் சாட்டி உள்ளது.

அரசுக்கு ஆதரவாக லிபியாவில் துருக்கி படைகளை நிறுத்த உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com