

காபூல்,
ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மாகாணத்தில் கோஷ்க்ரோட் என்ற இடத்தில் இருந்து பிரதான நகரத்துக்கு நேற்று முன்தினம் மதியம் பலரை ஏற்றிக்கொண்டு ஒரு வாகனம் சென்றது. அப்போது சாலையோரம் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்ததில் அந்த வாகனம் சிக்கியது. இதனால் அந்தப் பகுதியை கரும்புகை சூழ்ந்தது.
இந்த குண்டுவெடிப்பில் அந்த வாகனம் உருக்குலைந்து போனது. அதில் பயணம் செய்தவர்களில் 9 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
குண்டுவெடிப்பில் சிக்கிய வாகனத்தில் பயணம் செய்தவர்கள், தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஸ்பினி காரி கிராமத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. இந்த வாரத்தில் அங்கு ஷாகாலிகூட் மற்றும் நிஷ் பகுதிகளில் நடந்த சாலையோர குண்டுவெடிப்புகளில் பலர் கொல்லப்பட்ட நிலையில், இந்த குண்டு வெடிப்பு அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்பாவி பொதுமக்களை பலி வாங்கியுள்ள இந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. துணைத்தூதரகம் கவலை தெரிவித்துள்ளது. இந்த சாலையோர குண்டுவெடிப்புகளுக்கு தலீபான் பயங்கரவாதிகளை ஆப்கானிஸ்தான் அரசு குற்றம்சுமத்துகிறது. ஆனால் தலீபான்கள் தரப்பில் இது குறித்து வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.