

ஜெனீவா,
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்றானது, உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ள மருத்துவ உலகம் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் இதன் தீவிரத்தை கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இருப்பினும் கொரோனா வைரஸ் கிருமியின் தோற்றம் குறித்த மூல காரணம் கண்டறியப்பட்டால், இந்த நோயை எதிர்த்து போராடுவதற்கான சுலபமான வழிகளை கண்டறிய முடியும் என நோய்த்தொற்று நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் கிருமியானது சீனாவின் உகான் மாகாணத்தில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது.
இது குறித்து ஆய்வு செய்வதற்காக உலக சுகாதார அமைப்பு சார்பில், நிபுணர்கள் குழு ஒன்று சீனாவிற்கு சென்று சுமார் 4 வாரங்கள் தங்கியிருந்து ஆய்வு நடத்தியது. கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளின்படி, கொரோனா வைரஸ் வவ்வாலில் இருந்து ஏதேனும் விலங்கு மூலமாக மனிதனுக்கு பரவி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரசை ஆய்வகத்தில் உருவாக்கியதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து சீன அரசு கூறுகையில், உகான் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் தப்பித்திருக்கலாம் என்ற கோட்பாட்டை அபத்தமானது என்று குறிப்பிட்டதுடன், இந்த பிரச்சினையை அரசியல்மயமாக்குவது விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கும் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் பேசுகையில், கொரோனா வைரசின் தோற்றத்தை கண்டறிவது என்பது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அந்த பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கும் நாம் செலுத்த வேண்டிய கடன் என்று குறிப்பிட்டார்.
மேலும் கொரோனா தொற்றுநோயின் தோற்றம் குறித்த மூல தரவுகளை சீனா வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இந்த விவகாரத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இது குறித்த விசாரணைகளுக்கு சீனா முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.