

சியாங்ராய்,
தாய்லாந்து நாட்டில் தாம் லுவாங் என்னும் குகைக்கு தங்களது பயிற்சியாளருடன் காட்டுப்பன்றி என்னும் சிறுவர் கால்பந்து குழுவினர் கடந்த மாதம் 23-ந்தேதி உல்லாச பயணம் சென்றனர். இந்த குழுவில் 11 முதல் 16 வயது கொண்ட 12 சிறுவர்கள் இடம் பெற்று இருந்தனர்.
அங்கு பெய்த திடீர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் குகையில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். இதனால் 13 பேரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே கருதப்பட்டது.
இந்தநிலையில் 17 நாட்களுக்கு பிறகு கால்பந்து குழுவினரை சர்வதேச மீட்பு குழுவினர் உயிரை பணயம் வைத்து அதிரடியாக மீட்டனர்.
முதல் பேட்டி
பின்னர் 12 சிறுவர்களும் அவருடைய பயிற்சியாளரும் அருகில் உள்ள சியாங் ராய் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் சிறுவர்கள் அனைவரும் சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று வீடு திரும்பினர்.
மரணத்தின் விளிம்புவரை சென்று உயிர் தப்பிய அவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவம் குறித்து சியாங் ராய் நகரில் உலகளாவிய பேட்டிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் அந்நகரில் திரண்டனர்.
இதனால், தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓச்சா உயிர் தப்பிய சிறுவர்களின் மனது நோகும்படி கேள்வி எதுவும் கேட்க வேண்டாம் என்று செய்தியாளர்களைக் கேட்டுக் கொண்டார். சிறுவர்களும், அவர்களது குடும்பத்தினரும் ஒரு மாதம் வரை செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களும் அறிவுறுத்தினர்.
முன்கூட்டியே தயாரான நிருபர்களின் கேள்விகளுக்கு சிறுவர்களும், பயிற்சியாளரும் அளித்த பேட்டி:
அம்மா அடிப்பார்
அதுல் சாம் ஆன்(14): இது மாயாஜாலம் போன்றது. இதை இப்போதும் நம்ப முடியவில்லை.
பெயரை கூறாமல் பேசிய ஒரு சிறுவன், நாம் அனைவரும் கடைசி வரை போராடுவோம் என்று ஒவ்வொருவரிடமும் கூறினேன். எத்தகைய சூழ்நிலையிலும் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என அனைவரையும் தைரியப்படுத்தினேன் என்றான்.
டீ (11): நாங்கள் தண்ணீரை மட்டுமே குடித்தோம். என்னிடம் வலிமை கிடையாது. உணவைப் பற்றி நான் அதிகம் சிந்திக்கவில்லை. அதனால் எனக்கு அதிகம் பசி எடுக்கவில்லை.
இன்னொரு சிறுவன், குகைக்குள் இருந்தபோது மிகவும் பயந்தேன். ஏனென்றால் வீட்டுக்கு திரும்பாவிட்டால் என்னை அம்மா அடிப்பார் என்ற பயம் இருந்தது என்று வெகுளித்தனமாக கூறினான்.
குகையை தோண்டினோம்
பயிற்சியாளர் எக்கோபோல்: எங்களை மீட்பதற்காக யாரும் வரும்வரை நாங்கள் காத்திருக்க விரும்பவில்லை. அதனால் குகையின் மேற்பகுதியை தோண்டிவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ஒருவர் மாற்றி ஒருவர் தோண்டிக் கொண்டே இருந்தோம்.
என்றபோதிலும் எங்களுடைய முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. எங்கள் குழுவில் இருந்த எல்லோராலும் நீந்த முடியும். ஆனால் சிலர் நீந்துவதில் வலிமையானவர்கள் அல்ல.