தாய்லாந்து முன்னாள் பிரதமர் மரணம்

ராணுவத்தில் இருந்து விலகி ஓய்வில் இருந்தநிலையில் தனது வீட்டில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.
பாங்காங்,
தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் சுசிந்தா கிரப்ரயூன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. தலைநகர் பாங்காங்கில் 1933-ம் ஆண்டு அப்போதைய ராணுவ தளபதிக்கு கடைசி மகனாக சுசிந்தா கிரப்ரயூன் பிறந்தார். தொடர்ந்து தந்தையின் அடிச்சுவடுகளை பின்பற்றி சுசிந்தா கிரப்ரயூன் தாய்லாந்து ராணுவத்தில் 1953-ம் ஆண்டு கர்னலாக பதவியேற்றார்.
பின்னர் தன்னுடைய சீரிய முயற்சியாலும், ஆர்வ மிகுதியால் ராணுவத்தில் உயரிய பதவிகளை அவர் அலங்கரித்தார். 1990-ம் ஆண்டு ராணுவ தளபதியாக சுசிந்தா கிரப்ரயூன் பதவியேற்றார்.
இந்தநிலையில் 1991-ம் ஆண்டு தாய்லாந்து நாட்டின் பிரதமராக இருந்த சச்சிசாய் சுன்னவான் ஆட்சி, சுசிந்தா கிரப்ரயூனின் தலைமையிலான ராணுவ படையினரால் கவிழ்க்கப்பட்டது. இதனால் அந்த நாட்டின் 19-வது பிரதமராக சுசிந்தா கிரப்ரயூன் பதவியேற்றார். 2 ஆண்டுகள் பதவியில் இருந்தநிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து ராணுவத்தில் இருந்தும் விலகி ஓய்வில் இருந்தநிலையில் தனது வீட்டில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.






