அமெரிக்காவில் மீண்டும் தெரிந்த 72 அடி அகல நீர்ச்சுழி; பார்வையாளர்கள் பரவசம்

அமெரிக்காவில் நரகத்திற்கான வழி என அழைக்கப்படும் 72 அடி அகல நீர்ச்சுழி மீண்டும் திறந்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் மீண்டும் தெரிந்த 72 அடி அகல நீர்ச்சுழி; பார்வையாளர்கள் பரவசம்
Published on

கலிபோர்னியா,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கிழக்கே நபா கவுன்டி பகுதியில் மோன்டிசெல்லோ என்ற நீர்த்தேக்கம் ஒன்று உள்ளது. இதன் உச்சியில் பெர்ரியெஸ்சா என்ற ஏரி அமைந்துள்ளது.

இந்த ஏரியில் குளோரி ஹோல் என்ற பெயரில் 72 அடி அகல நீர்ச்சுழி ஒன்று உள்ளது. ஏரியின் நீர்மட்டம் 15.5 அடிக்கு மேலே செல்லும்போது, நீர்ச்சுழியானது தெரிய தொடங்கும். இந்த 245 அடி நீளம் கொண்ட சுரங்க வழியானது, ஒரு வினாடிக்கு 48 ஆயிரம் கன அடி நீரை உள்வாங்கி கொள்கிறது.

உண்மையில் இது நரகத்திற்கான வழி அல்ல. ஓர் அணையில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றுவதற்காக அமைந்துள்ள சரிவான கால்வாய் பகுதிக்கு மாற்றாக, கடந்த 1950ம் ஆண்டு பொறியியலாளர்களால் இது உருவாக்கப்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டு வெளியே தெரிந்த இதனை காண்பதற்கு நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் அந்த பகுதிக்கு வந்துள்ளனர். பார்ப்பதற்கே அச்சமூட்டும் வகையில் உள்ள இந்த குளோரி ஹோல் மீண்டும் கடந்த 2019ம் ஆண்டு திறந்துள்ளது.

இந்த முறை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஆர்வமுடன் அதனை காண வந்துள்ளனர். அந்த ஆண்டு மார்ச்சில், வாத்து ஒன்று அந்த பெரிய குழிக்குள் விழுந்துள்ளது. அதனை மற்றவர்கள் படம் பிடித்தும் உள்ளனர். அந்த வாத்து உயிர் பிழைத்து விட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கடந்த 1997ம் ஆண்டு எமிலி ஸ்குவாலெக் என்ற 41 வயதுடைய பெண் இதனை நோக்கி நீந்தி சென்று சிக்கி கொண்டார். 20 நிமிடங்கள் வெளியே இருந்து, போராடிய அவர் அதன்பின் குழிக்குள் இழுக்கப்பட்டு காணாமல் போனார். இந்த குளோரி ஹோலுக்குள் விழுந்து காணாமல் போன ஒரே மனிதர் அவராவார்.

இது பாதுகாப்பற்றது என்ற காரணத்தினால், நீச்சல் அடித்து செல்வதற்கோ அல்லது இந்த பகுதியில் குளிக்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, கயிறு கட்டி தடுப்பும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com