அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதலுக்கு 'ஆபரேஷன் பஷாரத் அல்-பாத்' என பெயர்

பக்ரைனில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதலுக்கு 'ஆபரேஷன் பஷாரத் அல்-பாத்' என பெயர்
Published on

குவைத்,

ஈரான் அணு ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி இஸ்ரேல் கடந்த 13-ந் தேதி திடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த அதிரடிக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த 11 நாட்களாக நடந்து வரும் இந்த மோதல்களால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் நீடித்து வருகிறது.

இதனையடுத்து இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஈரானை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்தது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வரும் நிலையில், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பலன் அளிக்காது எனக்கூறி ஈரான் ஒதுங்கி விட்டது.

இதை தொடர்ந்து அமெரிக்கா 'மிட்நைட் ஹாமர்' என்று பெயரில் ஈரான் மீது நேரடியாக தாக்குதல் தொடுத்தது. அந்த நாட்டின் போர்டோ, நட்டான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 இடங்களில் உள்ள அணுசக்தி நிலையங்களை தாக்கியது. அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள், 13 ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட 'பங்கர் பஸ்டர்' எனப்படும் பதுங்கு குழி அழிப்பு குண்டுகளை வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் கூறியிருந்தது.

இந்த நிலையில், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. 10 ஏவுகணைகள் வீசப்பட்ட நிலையில், 7 இடைமறிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் 3 ஏவுகணைகள் சரியாக இலக்கை தாக்கியுள்ளன. இதுவரை பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. அமெரிக்காவிற்கு எதிரான இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் பஷாரத் அல்-பாத்' (BASHARAT AL-FATH OPERATION) என பெயரிடப்படுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. தமிழில் வெற்றியின் நற்செய்தி (Glad Tiding of Victory) என்று பெயர்.

கத்தாரில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் பஹ்ரைன், எகிப்து, குவைத், ஜோர்டான், லெபனான், ஈராக் மற்றும் சவுதி அரேபியா தங்களது வான்வெளியை மூடியுள்ளன. அண்டை நாடான பக்ரைனில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் தாக்குதலை தொடர்ந்து போர் விமானங்களை வேறு இடங்களுக்கு மாற்றியது அமெரிக்கா. மீண்டும் ஏவுகணைகளை வீசலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் உச்சகட்ட பதட்டத்தில் மேற்கு ஆசியா உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com