

மனிலா,
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக மிக அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டன. இதன் காரணமாக இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்தன. தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தன.
இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கொரோனா தொற்றின் 2வது அலை பரவல் காரணமாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் இந்த தடை அறிவிப்பை மேலும் 15 நாள்களுக்கு நீட்டித்து பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 15ஆம் தேதி வரை இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் பயணிகளுக்கு பிலிப்பின்ஸ் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.