அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் எல்லைச் சுவர் கட்ட ரூ.6,900 கோடி நிதி - ராணுவ தலைமையகம் அங்கீகாரம்

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் எல்லைச் சுவர் கட்ட ரூ.6,900 கோடி நிதி ஒதுக்க ராணுவ தலைமையகம் அங்கீகாரம் வழங்கியது.
அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் எல்லைச் சுவர் கட்ட ரூ.6,900 கோடி நிதி - ராணுவ தலைமையகம் அங்கீகாரம்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்கிற கொள்கையை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி டிரம்ப், பிற நாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை விரும்பவில்லை. இதன் காரணமாக அகதிகள் விவகாரத்தில் அவர் கடுமையான போக்கை கையாண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அகதிகள் வருகையை தடுக்கும் வகையில் மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட எல்லைச் சுவர் எழுப்ப அவர் முடிவு செய்தார்.

ஆனால் இந்த திட்டத்தை அமல்படுத்த மெக்சிகோவிடம் நிதிகேட்டபோது அந்நாடு கைவிரித்துவிட்டது. இதனால் தனது கனவு திட்டத்தை நிறைவேற்ற அமெரிக்க நாடாளுமன்றத்தின் உதவியை டிரம்ப் நாடினார். இத்திட்டத்துக்காக 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) நிதி ஒதுக்கும்படி அவர் நாடாளுமன்றத்தை வலியுறுத்தினார்.

ஆனால் டிரம்பின் தற்பெருமைக்கான திட்டத்துக்காக மக்களின் வரிப்பணத்தை செலவிடமுடியாது என கூறி ஜனநாயக கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது அங்கு பெரும் அரசியல் குழப்பத்துக்கு காரணமானது. நிதி மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்து, பல்வேறு அரசுத்துறைகள் முடங்கின. எனினும் எல்லைச்சுவர் கட்டும் முடிவில் விடாப்பிடியாக இருக்கும் டிரம்ப், அதற்கான நிதியை பெறுவதற்காக கடந்த மாதம் 15-ந் தேதி நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.

இதற்கு ஜனநாயக கட்சியினரிடம் மட்டும் இன்றி, டிரம்பின் சொந்த கட்சியான குடியரசு கட்சியினரிடமும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் டிரம்ப் பிரகடனப்படுத்திய அவசர நிலையை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக குடியரசு கட்சியினர் பலர் ஓட்டுப்போட்டனர். ஆனாலும் டிரம்ப் தனது மறுப்பு ஓட்டுரிமை அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானத்தை நிராகரித்துவிட்டார்.

இந்த நிலையில் மெக்சிகோ எல்லையில் 92 கி.மீ. தொலைவுக்கு எல்லைச்சுவர் கட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.6 ஆயிரத்து 900 கோடி) உள்நாட்டு பாதுகாப்பு, சுங்க மற்றும் எல்லை ரோந்து துறைக்கு ஒதுக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அங்கீகாரம் வழங்கி உள்ளது. அத்துடன் இந்த கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க ராணுவ என்ஜினீயர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்த நிதியை கொண்டு எல்லைச்சுவர் மட்டும் கட்டாமல் எல்லையில் உள்ள சாலைகள் முழுவதையும் மேம்படுத்துவது, புதிய மின்விளக்குகளை நிறுவுவது உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பென்டகன் வலியுறுத்தி உள்ளது.

இதற்கிடையில் ராணுவ தலைமையகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஜனநாயக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜனநாயக கட்சியை சேர்ந்த செனட் சபை உறுப்பினர்கள் ராணுவ மந்திரி (பொறுப்பு) பட்ரீக் சனாகானுக்கு எழுதி அனுப்பிய கடிதத்தில் உள்நாட்டு பாதுகாப்புத்துறை நிதி ஒதுக்கியதையும், நாடாளுமன்ற பாதுகாப்பு குழுவின் ஒப்புதலை பெறாமல் அந்த நிதியை பயன்படுத்துவதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். ராணுவம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத்துறை அரசியல் குறுக்கீட்டை அனுமதிப்பது கவலை அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com