இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா 44 நாடுகளுக்கு பரவியது

இந்தியாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ், மற்ற வைரஸ்களைவிட வேகமாக பரவுவதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.
இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா 44 நாடுகளுக்கு பரவியது
Published on

ஜெனீவா,

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த வாரம் தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது 4 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்ட நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது. எனினும் உயிரிழப்பு அதிகமாகவே உள்ளது. இந்த அளவுக்கு வைரஸ் வேகமாக பரவுவதற்கு முக்கியமான காரணம், இந்தியாவில் உருமாற்றம் அடைந்த வைரஸ்தான் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் பரவலாகக் காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் உலகளவில் 44 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கு முக்கியக் காரணம் பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்தான். கடந்த அக்டோபர் மாதம் முதன்முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரஸ்தான் தற்போது உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்களில் உள்ள 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 4,500 மாதிரிகளில் கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவைத் தவிர்த்து இந்தியாவில் உள்ள பி.1.617 உருமாறிய வைரஸ் பிரிட்டனில்தான் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் பரவி வரும் பி.1.617 வகை உருமாறிய கொரோனா வைரஸ், மற்ற வைரஸ்களைவிட வேகமாக பரவுகிறது, உருமாற்றம் அடைந்துள்ளது என்று கூறியதுடன், அதன் குணங்களையும் பட்டியலிட்டு, கவலைத் தெரிவித்திருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com