

கோலாலம்பூர்,
பிரதமர் நஜிப் ரசாக் மீது பல கோடி டாலர் மதிப்பிலான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நாடாளுமன்றத்தின் 5 ஆண்டு ஆயுள் காலம் முடிவதற்கு இன்னும் 2 மாதங்களுக்கு மேல் உள்ளது.
இந்த நிலையில் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தை பிரதமர் நஜிப் ரசாக் நேற்று கலைத்து விட்டார். அதற்கு மன்னர் சுல்தான் ஐந்தாம் முகமது ஒப்புதல் அளித்து விட்டார். எனவே நாடாளுமன்ற கலைப்பு, இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
அந்த நாட்டின் சட்டப்படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். குறைந்தபட்சம் பிரசாரத்துக்கு 11 நாட்கள் தரப்பட வேண்டும். எனவே அடுத்த சில நாட்களில் அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் கூடி தேர்தல் தேதியை முடிவு செய்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் நஜிப் ரசாக் கூட்டணிக்கு அமில பரிசோதனையாக அமையும்.
நஜிப் ரசாக், எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது கட்சியுடன் கடும் சவாலை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளார்.
இருப்பினும் நஜிப் ரசாக் அணி வெற்றி பெற்று விடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. காரணம், மகாதிர் முகமதுவின் எதிர்க்கட்சி அணிக்கும், பாஸ் என்று அழைக்கப்படுகிற மலேசிய இஸ்லாமிய கட்சிக்கும் இடையே ஏற்பட்டு உள்ள பிளவு, எதிர் ஓட்டுகளை சிதறடித்து விடும் என நம்பப்படுகிறது.